
Sinamkol
#சினம்கொள் – எங்கள் தேசத்தின் உன்னதங்களை உயிர்ப்போடு மக்களின் முன்கொண்டுவரும் ஒரு திரைப்படத்தின் பாய்ச்சல். ஒரு விடுதலைப் போராளியின் வாழ்வு – எத்தனை இடர்களை சுமந்தாலும் – எப்போதும் மக்களிற்கான வேலியாகவே இருக்கும் என்பதை பதிவுசெய்கிறது சினம்கொள்.
திரைப்படம் எனும்போது அதன் நுட்பங்கள் எனுமிடத்தில் சர்வதேச தரத்திற்கு நிகராக, சில இடங்களில் அதற்கும் மேலாக காட்சியமைப்புகளை ஊரின் தரிசிப்புகளாக கொண்டுவந்து தாயகமண்ணின் வாசத்தை தொடவைக்கின்றது.
படத்தின் நாயகனாக வரும் அமுதன் ஒருபோதும் அழவில்லை. ஆனால் அவனது உணர்வுகளின் நடிப்பு பார்ப்பவர்களை அழவைக்கும் உண்மைச் சம்பவங்களின் பிரதியாக பதிவுசெய்கின்றது சினம்கொள். அதனைப்போல படத்தின் நாயகியான அமுதனின் மனைவியின் நடிப்பும் மிகவும் பாராட்டதக்கது.
தனது மனைவியையும் பிள்ளையையும் தேடிச்செல்லும் அமுதனின் தவிப்பும் அதற்காக சைக்கிளில் அவர் ஓடும் விதமும் அனைவர் மனதிலும் ஆழப்பதிந்த துடிப்புகள் அவை.
இதனால் இவர்களை நடிகர்களாக அறிமுகப்படுத்துவதை விட அந்த பாத்திரங்களாகவே வாழ்ந்தவர்கள் என பதிவு செய்வதே பொருத்தம்.
தாயகத்தில் இருந்து வருகைதந்த கவிஞர் ஜேசுராசா அவர்களும் வருகைதந்து இப்படத்தை பார்வையிட்டு நிறைந்த திருப்தியை பதிவுசெய்தார். அடுத்த படைப்புகளில் கவனம் செலுதத்தப்படவேண்டிய விடயங்களையும் பகிர்ந்துகொண்டமை கூடுதல் சிறப்பு.
சில விடயங்களை சொல்லாமல் சொல்லவேண்டிய நிலையால் விரைவாக அதற்கான சட்டகம் நகர்த்தப்படவேண்டி வந்திருக்கும் என நினைக்கின்றேன். ஆனால் மீளவும் பார்க்கவேண்டும் என்ற ஆவலையும் தேடலையும் கொடுப்பதால் அதுவும் சரியாகவே பொருந்திப்போகின்றது.
எமது மண்ணையும் மக்களையும் சிதைக்கும்எதையும் எப்போதும் எந்த வடிவிலும் எதிர்கொள்வோம் என்பதை அமுதன் வடிவில் படைக்கிறார் ரஞ்சித் ஜோசப்.
அதனிலும் உள்ளே, மர்மமாய் தொடரும் மரணங்கள் பற்றிய விழிப்பையும் பதிவு செய்து தனது சமூக கடமையை படைப்பாளியாக நிறைவு செய்கிறார் அவர்.
இன்னும் ஒரு திரையிடலை ஒழுங்குசெய்யுங்கள் . எமது மக்கள் பலர் வந்து பார்ப்பார்கள் என நம்பிக்கை தருகின்றார்கள். நானும் மீண்டும் ஒரு தடவை பார்க்கவேண்டும் என்ற விருப்பு வேறு.
நிறைவாக நாங்கள் ஆர்? வீழ்வோமா? என்பதை பதிக்கின்றது சினம்கொள்.
– கீதன் இளையதம்பி – with Ranjith Joseph Theepachelvan Pratheepan







